பெண் மையக் கதைகளுக்கு முன்னணி ஆண் நட்சத்திரங்களின் ஆதரவு தேவைப்படுகிறது – ராதிகா ஆப்தே!

நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடரில் ராதிகா ஆப்தே வில்லியாக நடித்துள்ளார். இந்தத் தொடர் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடர், 800 ஆண்டுகளாகப் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பெர்னூரு என்ற கற்பனை சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்டது. இதில் பவானி என்ற கதாபாத்திரத்தில் பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அந்தச் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் ருத்ரா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண் மையக் கதைகள் திரையரங்குகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராதிகா ஆப்தே பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்தால் தவிர, பெண் மையக் கதைகள் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்ப்பது கடினமாக உள்ளது. ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகிறதா என்பதைப் பார்த்து நான் படங்களைத் தேர்வு செய்வதில்லை. எனது படங்கள் ஏதாவது ஒரு வழியில் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் சிறப்பாக இருந்தாலும், திரையரங்குகளில் வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்குப் போராட வேண்டியுள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கு பெண் நடிகைகளுக்குப் பெரும்பாலும் முன்னணி ஆண் நட்சத்திரங்களின் ஆதரவு தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading