சென்னையில் நடைபெற்ற செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், சமூக வலைத்தள விமர்சனங்கள், தனது அடுத்தடுத்த படங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், “பெரிய படம், சின்ன படம் என்பதை பட்ஜெட்டை வைத்துத்தான் பார்க்கிறோம். சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது பெரிய பட்ஜெட் படங்களுக்கும் நல்லது. இதன் மூலம் நிறைய திறமையாளர்கள் வெளியே வருவார்கள். முன்பு சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடியில் பார்த்தார்கள். இப்போது அவற்றைத் திரையரங்குகளில் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
நான் தயாரித்த ‘தாய் கிழவி’ மற்றும் ‘சிறை’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் சினிமாத் துறை நன்றாக இருக்கிறது. இதில் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அனைவரின் பங்களிப்பும் முக்கியம். என்னைப் பற்றி அரசியல் தொடர்பாக நிறைய வதந்திகள் வருகின்றன. அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்” என்றார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்மறையான கருத்துகளைப் படிப்பதில்லை என்றும், தனது சமூக வலைத்தளப் பணிகளைத் தனது குழுவினரே கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். “இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு படங்களுக்கான கதை விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. எனது தயாரிப்பில் மூன்று படங்கள் உருவாகி வருகின்றன. ஆக மொத்தம் ஏழு கதைகள் மனதில் இருக்கின்றன. படத்திற்காக உடலளவில் தயாராகவும் நேரம் தேவைப்படுகிறது. நம்மை நம்பிப் பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்காக உழைக்க வேண்டும். அவ்வப்போது ரசிகர்களையும் சந்திக்க வேண்டும். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவர் பதிவிடும் எதிர்மறைக் கருத்து என்னைப் பாதிக்காது” என்று கூறினார்.
தனது வெற்றிக்குப் பின்னால் பலரது உழைப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “மக்கள் என்னைத் தங்களைப் போன்ற ஒருவனாகப் பார்க்கிறார்கள். அதனால்தான் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று பாண்டிராஜ் தலைப்பு வைத்தார். முதல் படத்தில் நான் பெரிய நடிகன் கிடையாது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். புதிதாகச் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ‘நீ காமெடியன், நீ ஏன் அமரன் கதையில் நடிக்கிறாய்?’ என்று யாரும் கேட்கவில்லை. எனது வெற்றிக்குத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதைகள், சக நடிகர்கள் எனப் பலரும் காரணம்” என்று தெரிவித்தார்.
