ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். ‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள இயக்குநருடன் சூர்யா இணைந்துள்ள இப்படத்தின் நிகழ்ச்சி நேற்று துபாயில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை நஸ்ரியா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். ஜித்து மாதவன் இயக்கத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி. எனது சினிமா பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக இப்படத்தின் படப்பிடிப்பு அமைந்தது. சூர்யா சார், நஸ்லென் ஆகியோருக்கும் நன்றி. நவம்பர் 6-ம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று ‘சீன்’ படத்தைப் பாருங்கள். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
நாங்கள் சினிமாவைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சூர்யா சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். நாங்களும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அவரும் ஒரு முக்கியக் காரணம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச் சிறந்த மனிதரும் கூட. அவருடன் நேரத்தைச் செலவிட்டு இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
