ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் தங்களது கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழில் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த மிர்ணா, பின்னர் மலையாளத் திரையுலகில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், முதல் பாகத்தில் வசந்த் ரவியின் மனைவியாகவும், ரஜினிகாந்தின் மருமகளாகவும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வசந்த் ரவியின் கதாபாத்திரம் ரஜினியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் விதவையான மருமகளாக மிர்ணா நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியை முன்னிட்டு மிர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றியைப் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே சூப்பர் ஸ்டார். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை மெகா பிளாக்பஸ்டராக மாற்றியதற்கு நன்றி, ரஜினிகாந்த் சார். நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. அன்பிற்குரிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ‘ஜெயிலர்’ படைப்பில் என்னையும் ஓர் அங்கமாக்கியதற்கும், என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
