‘டோரதி’ திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நடிகை ஜீவா, தற்போது திரையுலகில் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். திருநங்கையான இவர், இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ளார். ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ போன்ற இணையத் தொடர்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட காலமாகத் திரைத்துறையில் பயணித்து வரும் ஜீவாவுக்கு, ‘டோரதி’ படத்தில் நடித்த கதாபாத்திரம் கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் தெலுங்குத் திரைப்படம் ஒன்றிலும் நடிக்கவுள்ள அவர், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகத் தனியாகப் போட்டோ ஷூட்டையும் நடத்தியுள்ளார்.
தனக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து மனம் திறந்த ஜீவா, இத்தனை ஆண்டுகளாகத் தனது நடிப்புக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தை இப்போது முதல்முறையாக முழுமையாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். தனது தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக இந்தத் தருணம் சாத்தியமாகியுள்ளதாகக் கூறிய அவர், ரசிகர்கள் தன்னை அன்புடன் “ஜீவா அக்கா” என்று அழைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயணிப்பதற்கான உற்சாகத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் மதிக்கும் நபர்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரமும் அன்பும், தனது வாழ்க்கையின் தற்போதைய காலகட்டத்தை மறக்க முடியாத பொக்கிஷமான தருணமாக மாற்றியுள்ளதாகவும் ஜீவா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
