Advertisement

அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் பிசியான ‘பத்தா’ சிறுவன் சாய் பிரித்விராஜ்… ‘ராக்கா’ படத்தில் நடிக்கிறாரா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில், கதையின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் சாய் பிரித்விராஜ் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். முதல் படத்திலேயே அவருக்குக் கிடைத்த பாராட்டுகள் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.

சமீபத்திய பேட்டியில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சாய் பிரித்விராஜ், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனது அக்கா மூலமாகவே ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அதனால் முதலில் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும், முதல் படத்திற்கே இவ்வளவு நல்ல கருத்துகள் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நடிப்பதற்குச் சற்று பயமாக இருந்ததாகக் கூறிய அவர், தனக்குக் கிடைக்கும் பாராட்டுகளைப் பார்த்து அக்கா கயலும் மகிழ்ச்சியடைவதாகச் சொன்னார். அக்கா மீது தனக்கு அளவற்ற அன்பு இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

‘பத்தா’ படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தேர்வானது தனது அக்கா கயல்தான் என்றும், வயது மற்றும் உயரம் பொருந்தாததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சாய் பிரித்விராஜ் தெரிவித்தார். அக்காவுடன் சென்றபோது தற்செயலாக ஆடிஷனில் பங்கேற்ற தன்னை இயக்குநர் பாலாஜி தரணிதரன் தேர்வு செய்ததாகக் கூறினார். படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி தன்னை அன்புடன் கவனித்துக்கொண்டதுடன், தினமும் நடிப்பதற்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக, படத்தின் இறுதிக்கட்ட விசாரணைக் காட்சியில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விஜய் சேதுபதி வழிகாட்டியதாகவும், அந்தக் காட்சி முடிந்ததும் இயக்குநர் கைதட்டி தன்னைப் பாராட்டியதாகவும் கூறினார்.

இயக்குநர் அட்லியைச் சந்தித்தபோது ‘தேன்மொழி’ பாடலைப் பாடிக் காட்டியதாகவும், தனது நடிப்பைப் பாராட்டிய அட்லி, அவருடைய சிறுவயதுப் புகைப்படத்தைக் காட்டியதாகவும் பகிர்ந்துகொண்டார். அந்தப் புகைப்படத்தில் அட்லி தன்னைப் போலவே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அட்லியின் ‘ராக்கா’ படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்தார்.

தற்போது தனுஷின் 56-வது படத்தில் நடித்து வருவதாகக் கூறிய சாய் பிரித்விராஜ், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் முழுக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளைத் தேட முடிவு செய்துள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply