மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில! சூர்யா நடித்து வரும் ‘சீன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், மலையாள நடிகர்களான நஸ்லென், நஸ்ரியா நசீம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரி தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் சூர்யா பார்வைக் குறைபாடு கொண்டவராக நடித்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால் அவரது கதாபாத்திரம் குறித்த விவாதங்களும் எழுந்தன. இந்நிலையில், இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமான டிராவிட் செல்வத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டிராவிட் செல்வம், சூர்யாவின் கதாபாத்திரத்திற்குப் பார்வைக் குறைபாடு இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பாமல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார். நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘சீன்’ படத்தின் கதை மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
