நடிகர் நெப்போலியன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கியுள்ளார். முழுவதுமாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமாகும்.
இப்படத்தின் பாடல்களைச் சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். நேஷ் வில் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
விழாவில் பேசிய நெப்போலியன், இப்படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்கள் மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் எனப் பல்வேறு துறைகளில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் என்றும், கலை மீதான ஆர்வத்தால் படத்தில் பங்கேற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் நடித்திருப்பது தனிச்சிறப்பு என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
