இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் கிரிக்கெட் வீரராக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கும் இப்படத்தில், அவர் கிரிக்கெட் வீரராகவும் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இசையமைப்புடன் கதாநாயகனாகவும் நடித்து வரும் அவர், இந்த ஆண்டில் மட்டும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘யூத்’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’, ‘இருமுடி’, ‘மண்டாடி’ உள்ளிட்ட படங்கள் அவருக்குக் கவனம் பெற்றுத் தந்துள்ளன.
இதற்கிடையே, ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தின் தலைப்பில் ‘மகி’ என்ற வார்த்தை இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் அன்புடன் ‘மகி’ என்று அழைப்பதால், படத்தின் தலைப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
