விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘பத்தா’ திரைப்படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘டி56’ திரைப்படத்தில் சாய் பிருத்விராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சாய் பிருத்விராஜ் சமீபத்திய நேர்காணலில் பேசியுள்ளார். ‘பத்தா’ படத்தில் தனது நடிப்பைப் பார்த்த படக்குழுவினர், தனுஷின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் ‘டி56’ படத்தில் தனுஷின் மகனாக சாய் பிருத்விராஜ் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு, உறியடி விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இளம் நடிகரான சாய் பிருத்விராஜ், தனுஷுடன் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
