சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘கரிகாலா’ திரைப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான கேத்ரின் தெரசா, தொடர்ந்து ‘கதகளி’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். அண்மையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ திரைப்படத்திலும் அவர் சிறப்பு நடனத்தில் தோன்றியிருந்தார். தற்போது ‘கரிகாலா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷைனிங் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கரிகாலா’ திரைப்படத்தை உகந்தர் முனி இயக்குகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் அவர் இயக்கிய ‘ஷம்பாலா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘கரிகாலா’ படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அவர் கடைசியாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சந்தீப் கிஷன் மற்றும் கேத்ரின் தெரசா இணையும் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ‘கரிகாலா’ திரைப்படம் பான் இந்தியா படமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதன் முதல் பாகம் 2027 ஜூலை 2-ம் தேதியும், இரண்டாம் பாகம் அதே ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கேத்ரின் தெரசா இணைந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
