தமிழில் காட்வின் ஃப்ராங்க் மற்றும் ‘யாத்திசை’ ராஜலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கும் இப்படத்தில் டி.எஸ்.கே, ரோபோ கணேசன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சி. சத்யா இசையமைக்க, எம்.எஸ். பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் அரங்குகள் அமைத்து, 30 நாட்களுக்கும் மேலாகப் பனிப்பொழிவுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய இயக்குநர் ரா. ராமமூர்த்தி, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் படமாக ‘ஒட்டாரம்’ இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களின் வலியையும், அவை குறித்த விழிப்புணர்வையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மேலும், தனிமனிதன் தனது வாழ்க்கைச் சுதந்திரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறான் என்பதையும் படம் எடுத்துரைக்கும் என இயக்குநர் கூறியுள்ளார்.
