2010-ல் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான ‘The Social Network’ திரைப்படம், ஃபேஸ்புக் உருவான பின்னணியையும் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்த சவால்களையும் விமர்சனங்களையும் விவரித்தது. அந்தப் படத்தின் நேரடித் தொடர்ச்சி இல்லை என்றாலும், ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்த சர்ச்சைகளை மையமாகக் கொண்ட ‘The Social Reckoning’ அதன் அடுத்தகட்டப் பார்வையாக அமைந்துள்ளது.
2021-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் ரகசிய ஆவணக் கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வெறுப்புப் பிரசாரங்கள் சமூக வலைதளத்தில் எவ்வாறு முன்னுரிமை பெற்றன, நிறுவனத்தின் செயல்பாடுகள் அதற்கு எப்படிப் பங்களித்தன என்பவை கதையின் முக்கிய அம்சங்கள். ஃபேஸ்புக்கில் பணியாற்றிய பிரான்சஸ் ஹாகன் வெளியிட்ட ரகசிய ஆவணங்களும், The Wall Street Journal பத்திரிகையாளர் ஜெஃப் ஹார்விட்ஸ் நடத்திய விசாரணையும் படத்தில் இடம்பெறுகின்றன.
2019-ல் ஃபேஸ்புக் டேட்டா இன்ஜினியராகப் பணியாற்றிய பிரான்சஸ் ஹாகன், அதிக வெறுப்பைப் பரப்பும் வீடியோ ஒன்றைப் பார்க்கிறார். அதன் பின்னணியை ஆராய்ந்தபோது, வெறுப்பைத் தூண்டும் கருத்துகளுக்கு ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதையும், உண்மைச் சரிபார்ப்பு செய்யப்படாத தகவல்கள் அதிக அளவில் பதிவிடப்படுவதையும் கவனிக்கிறார். இதேவேளையில், The Wall Street Journal பத்திரிகையாளர் ஜெஃப் ஹார்விட்ஸ், கருத்துச் சுதந்திரம் குறித்த வீடியோ ஒன்றின் கீழ் பதிவான கருத்துகளை ஆராய்கிறார். அதில் எதிரான கருத்துகள் இரண்டே இருக்க, மற்றவை அனைத்தும் அந்தக் கருத்துக்கு ஆதரவாக இருந்ததை அவர் கவனிக்கிறார்.
ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளில் தவறு இருப்பதாகச் சந்தேகிக்கும் இருவரும் பின்னர் சந்தித்து விசாரணையைத் தொடர்கின்றனர். அப்போது வெளிவரும் தகவல்கள் என்ன, மார்க் ஜுக்கர்பெர்க் எதிர்கொள்ளும் கேள்விகள் என்ன, நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உண்மைகள் எவை என்பதே படத்தின் மையக்கதை. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட நிலையில், அதன் மூலம் எதிர்பாராத ஆபத்துகளும் உருவாகலாம் என்பதை 2021-ம் ஆண்டு ஃபேஸ்புக் ஆவணக் கசிவும் அதை மையமாகக் கொண்ட இப்படமும் சுட்டிக்காட்டுகின்றன.
