கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஒருபக்கம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை இளையராஜாவுடன் சமீபத்தில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முன்னதாக பகிர்ந்திருந்தார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பாராட்டிய மகிழ்ச்சியையும் கார்த்திக் சுப்புராஜ் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்த் ‘டோரதி’ படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி சுமார் ஒரு மணி நேரம் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்ட கார்த்திக் சுப்பராஜ், “இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு என் சல்யூட்” என்று ரஜினிகாந்த் கூறியதைத் தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
