விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள இப்படத்தில், குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘A For Apple Studios’ மற்றும் ‘Star Studios 18 – Cine1 Studios’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல காரணங்களால் படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குநர் ஷங்கரும் இப்படத்தை பாராட்டியதுடன், இதில் நடித்த சிறுவனுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘பத்தா’ வெற்றி விழாவில் பேசிய அட்லீ, விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடிப்பவர் என்பதால், இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என்பதைவிட கதைக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறினார். மேலும், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி பின்னர் கைவிடப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
‘மருதநாயகம்’ படத்திற்காக தன்னிடம் ஒரு சிறிய கதைக்கரு இருப்பதாக கூறிய அட்லீ, எதிர்காலத்தில் சரியான வாய்ப்பும் பட்ஜெட்டும் அமைந்தால் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அந்தப் படத்தை உருவாக்க விரும்புவதாகவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
—
