விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை அட்லீயின் ‘A For Apple Studios’ தயாரித்துள்ளது.
படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘பத்தா’ கதையை முதலில் சில தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தயங்கியதாக தெரிவித்தார். ஒரு இயக்குநரின் முந்தைய படங்களின் வணிக வெற்றியும் தயாரிப்பாளர்களின் முடிவில் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால், அதில் தவறு இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், அட்லீ கதையை கேட்டதும் படத்தை தயாரிக்க முன்வந்ததுடன், படம் திரையரங்குகளில் வெற்றி பெறும் என்றும் விருதுகளைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்ததாக விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரனை வித்தியாசமாக சிந்திக்கும், வாழ்க்கையை ரசிக்கும் நண்பர் என பாராட்டிய விஜய் சேதுபதி, அவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்றில் தான் நடித்திருப்பதாகவும் கூறினார். ‘பத்தா’ தனது முந்தைய கூட்டணிகளைவிட இன்னும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இப்படம் பலரது வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
படத்தில் தன்னை கதாநாயகனாக அழைத்துச் சென்று பின்னர் சிறுவன் சாய் பிரித்விராஜுக்கு வில்லனாக மாற்றிவிட்டதாக நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார். அதே நேரத்தில், கிடைக்கும் புகழ் அவரது படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பு தனது அம்மாவை நினைவுபடுத்தியதாக கூறிய விஜய் சேதுபதி, சாய் அபயங்கர் தனது வயதைத் தாண்டிய புரிதலுடன் செயல்படுவதாகவும், எதிர்காலத்தில் லெஜெண்டாக வரக்கூடிய திறமை அவரிடம் இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
—
