‘அறம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கோபி நயினார். நயன்தாரா நடித்த இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உருவாக்கியது. தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ படத்தை இயக்கினார். அரசியல் மற்றும் பெண்ணிய கருத்துகளை மையமாகக் கொண்ட இப்படம் சென்சார் தொடர்பான சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இதற்கிடையில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘காலனி’. ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றிமாறனும், மோஷன் வீடியோவை விஜய் சேதுபதியும் வெளியிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவானது.தற்போது ‘காலனி’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முடிந்த பிறகு இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
