ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஷாலினி தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு எதிரான வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகரைத் தேர்வு செய்யப் பலரது பெயர்களைப் படக்குழு பரிசீலித்துள்ளது. அஜித்துக்கு சிவராஜ்குமார் மீது மிகுந்த மரியாதை இருப்பதால், அவரை அணுகுவது என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுமார் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பே சிவராஜ்குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நேரில் சந்தித்து கதையை விவரித்ததும், சிவராஜ்குமார் உடனடியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அஜித்தும் அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். வரும் நவம்பர் 17 அல்லது 18ஆம் தேதி முதல் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே ஜெயிலர், கேப்டன் மில்லர் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார், தற்போது டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த்தின் தந்தையாக நடிக்கும் பிக்காசோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தந்தை – மகன் பாசத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி முடித்துள்ள படக்குழு, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது. பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா ஆகியோரும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் மாதம் வரை ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக சென்னை மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
