‘தங்கல்’ திரைப்படத்தில் அமீர்கானின் மகளாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் பாத்திமா சனா ஷேக். தொடர்ந்து அமீர்கானுடன் அவர் இணைந்து நடித்ததையடுத்து, இருவரது உறவு குறித்து பல்வேறு கிசுகிசுக்களும் வெளியாகின. தற்போது சினிமாவில் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பாத்திமா சனா ஷேக் பேசியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
பாலிவுட்டில் ஆண் நடிகர்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஆழமான கதாபாத்திரங்கள் குறைவாகவே கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதால், சமூகத்தில் காணப்படும் சில பிரிவினை சார்ந்த விஷயங்களின் தாக்கமும் திரைத்துறையில் இருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சில நேரங்களில் நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அந்த சூழலில் பணத்திற்காக தங்களுக்கு விருப்பமில்லாத பணிகளையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.
தனது குடும்பம் வசதியான பின்னணியில் இருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், சில சந்தர்ப்பங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.எத்தனை விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டாலும், அதை முழுமையாக நாமே தீர்மானிக்க முடியாது என்றும் பாத்திமா சனா ஷேக் கூறியுள்ளார். வாழ்க்கை மற்றும் வருமானத்திற்காக, பிடிக்காத கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டிய சூழல் சில நேரங்களில் ஏற்படுவதாக அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
