மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது குரல் கடந்து வந்த பாதை குறித்துப் பேசியுள்ளார் அர்ஜுன் தாஸ்.அதில், “பள்ளியில் படித்த காலத்தில் என்னுடைய குரலைக் கேட்டுப் பலரும் கேலி செய்வார்கள். ‘உன்னுடைய குரல் ஏன் இப்படி இருக்கிறது? நீ பேசுவது கூடப் புரியவில்லை’ என்று விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இன்று அதே குரல் பலரையும் சென்றடைந்திருக்கிறது. எனது குரல் எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால், அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
மேலும், என்னுடைய படங்களைப் பார்த்துவிட்டு குரலைப் பற்றி மட்டுமே பேசாமல், எனது நடிப்பைப் பற்றியும் பலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
