‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நண்பர்கள், ‘பிளாக் ஹோல்’ எனப்படும் மர்மமான வீட்டில் தங்குகின்றனர். ப்ரோன் மூலம் உணவு தேடும் டிராவிட், பழைய கட்டடத்தில் வசிக்கும் சித்தியைக் கண்டு அவரது அழகில் மயங்கி காதல் கொள்கிறார். ஆரம்பத்தில் தனது பாட்டி இந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கூறி மறுக்கும் சித்தி, பின்னர் டிராவிட்டின் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஒருகட்டத்தில் சூனியக்காரியான பாட்டி தேவதர்ஷினியிடம் டிராவிட் சிக்கிக்கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார், அவரது நண்பர்கள் எவ்வாறு உதவுகின்றனர் என்பதே ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்திலேயே குழந்தைத்தனமான மனநிலையுடன் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற டிராவிட், இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். காதல், விரக்தி, ஏமாற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் நல்ல முயற்சியை அளித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அஞ்சலி நாயரின் நடிப்பும் கவனம் பெறுகிறது. நிறத்தின் அடிப்படையில் கேலிக்கு உள்ளாகும் பெண்ணாகவும், காதலுக்காக விட்டுக்கொடுக்கும் கதாபாத்திரமாகவும் தனது கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு படத்துக்கு உணர்வுபூர்வமான பலம் சேர்க்கிறது. இவர்களுடன் தீபக், குறைசி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆங்காங்கே நகைச்சுவையை முயற்சித்திருந்தாலும், அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

சூனியக்காரிப் பாட்டியாக வரும் தேவதர்ஷினியும், அவரது இளமைத் தோற்றத்தில் வரும் சித்தி இத்தனானியும் கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளனர். இருவரது நடிப்பும் படத்துக்கு ஆறுதல் அளிக்கிறது. நிறத்தின் அடிப்படையில் அழகைத் தீர்மானிக்கும் சமூகத்தைப் பற்றிய கேள்வியை முன்வைத்து திரைப்படம் முடிவடைகிறது.

முதல் பாதியில் கதைக்குள் செல்வதற்கு ஏற்படும் தாமதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மர்மமான வீடும் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகமெடுத்து பார்வையாளர்களைக் கதைக்குள் ஒன்றச் செய்கிறது. விறுவிறுப்பான காட்சிகளும் கவனத்துடன் அமைக்கப்பட்ட காட்சிப்படுத்தல்களும் படத்தைக் காப்பாற்றுகின்றன.

கதை பெரும்பாலும் இரண்டு இடங்களிலேயே நகர்வதால், சலிப்பைத் தவிர்க்க ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சில குறைகள் இருந்தாலும், ஃபேன்டஸி திரில்லர் கதைகளில் ஆர்வமுள்ளவர்கள் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading