கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் போஸ்டரையும், படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சின்னசாமி பொன்னையா. படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை அவரே எழுதியுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கிய ‘செங்குலம்’ படக்குழு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி ஆகிய இடங்களுடன் காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. 2027-ம் ஆண்டு ஐந்து மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
