கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 1980-களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நட்பு மற்றும் காதலுடன் முக்கியமான விஷயங்களையும் இப்படம் பேசுவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘மகான்’ படத்திற்குப் பிறகு ‘டோரதி’யை இயக்கத் திட்டமிட்டிருந்ததாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். ஆனால், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘ரெட்ரோ’ படங்களின் பணிகளால் ‘டோரதி’ தாமதமானதாகவும், கதையை தயாரிப்பாளர் குனீத்திடம் கூறியபோது பட்ஜெட் குறித்து எந்த தயக்கமும் இல்லாமல் படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரை தேர்வு செய்தபோது, அவர்கள் கதாபாத்திரங்களை எந்த அளவுக்கு கையாள்வார்கள் என்ற சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் முதல் நாளிலேயே இருவரும் தங்களது உடல்மொழியால் ஆச்சரியப்படுத்தியதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இருவரும் எதிர்காலத்தில் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களாக வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இளையராஜாவுடன் நாட்கள் பணியாற்றியது தனது சினிமா பயணத்தில் கிடைத்த பெரிய அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், அவரிடம் இசையை கேட்டு வாங்குவதைக் காட்டிலும், அவரிடம் இருந்து இயல்பாகவே சிறந்த இசை வெளிவரும் என பாராட்டியுள்ளார். அவருடன் பணியாற்றியது தனது பாக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’யைப் பார்த்த சிலர், இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என கேட்டதாகவும், தமிழ் சினிமா ரசிகர்களை நம்பியே இப்படத்தை உருவாக்கியதாக அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
