அபிஷேக் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்ரீ ராமாயண கதா’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. தேவ் சர்மா ஸ்ரீ ராமராகவும், அஞ்சலி அரோரா சீதா தேவியாகவும் நடித்துள்ள இப்படத்தில் ரஜனீஷ் துக்கால் ராவணனாகவும், ஷீல் வர்மா லட்சுமணனாகவும், நிர்பய் வாத்வா அனுமனாகவும் நடித்துள்ளனர். சீதா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து அஞ்சலி அரோரா பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தன்னிடம் பேசியபோது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படத்தை காட்டியதாகவும், அதைப் பார்த்து முதலில் சிரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்தபோது, இது தனக்கு கிடைத்த கடவுளின் அருள் என்று உணர்ந்ததாக அஞ்சலி கூறியுள்ளார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுமன் கோவிலுக்குச் சென்று தனக்கு உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதாகவும், அதனால் அனுமனின் அருளால்தான் சீதா கதாபாத்திரம் கிடைத்ததாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீதா தேவியின் குணங்களை முடிந்தவரை முழுமையாக வெளிப்படுத்த முயன்றுள்ளதாகவும், தனது நடிப்பு எந்த அளவுக்கு கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளது என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அஞ்சலி அரோரா கூறியுள்ளார். ஒரு நடிகராக தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்வது மட்டுமே தங்கள் கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
