கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் படத்தின் பின்னணி இசையையும் படக்குழு விழா நடத்தி வெளியிட்டது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இளையராஜாவை நேர்காணல் செய்துள்ளார். இதில் தனது இளமைக்கால அனுபவங்கள், பாரதிராஜா மற்றும் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய நினைவுகள் என பல்வேறு விஷயங்களை இளையராஜா பகிர்ந்துள்ளார். நீண்ட காலத்துக்குப் பிறகு தனது பழைய நினைவுகளை சிரித்தபடியும் ரசித்தபடியும் அவர் பேசியிருப்பது இந்த பேட்டியின் முக்கிய கவனமாக அமைந்துள்ளது.
அதில், சிறுவயதில் நடந்த ஒரு நாடக சம்பவத்தையும் இளையராஜா சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்துள்ளார். அப்போது பாரதிராஜா, இளையராஜாவிடம் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு நாடகத்தில் நடித்துள்ளார். அந்த சட்டை தன்னுடையது என்பதை ஊர்க்காரர்களிடம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, அதே நாடகத்தில் தான் வலியச் சென்று சண்டைக் காட்சியில் நடித்ததாக அவர் கூறியுள்ளார். இதைப் பார்த்த பாரதிராஜா, “நீ ஏன்டா வந்தே?” என கடுகடுத்ததாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
தனது சிறுவயது நண்பர் ஜெயகரன், மதுரையைச் சேர்ந்த நண்பர் எம். சுப்ரமணியன், ‘கோழிகூவுது’ நாடகம் உள்ளிட்ட பல பழைய நினைவுகளையும் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேட்டியில் இளையராஜா பகிர்ந்துள்ளார். அவரது இந்த அனுபவங்கள் இடம்பெற்றுள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
