அதிகரித்து வரும் விவாகரத்துகள் மற்றும் உறவுகளில் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசிய அவர், தம்பதிகளுக்கிடையே அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை மற்றும் அளவுக்கு அதிகமான செல்போன், சமூக வலைதள பயன்பாடு ஆகியவை விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளியில் உணவருந்தச் செல்லும் தம்பதிகள் கூட, ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு பதிலாக தங்களது செல்போன்களை பயன்படுத்துவதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதாக காஜல் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, தானும் தனது கணவரும் ஒவ்வொரு வாரமும் இரவு உணவிற்காக வெளியே சென்று, அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் செலவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதால், நேருக்கு நேர் நடைபெறும் அர்த்தமுள்ள உரையாடல்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் காஜல் அகர்வால் கூறியுள்ளார். உறவுகளில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்குவது அவசியம் என்பதையும் அவரது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.காஜல் அகர்வாலின் இந்த கருத்துகள் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
