தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘லப்பர் பந்து’. ‘கனா’, ‘எஃப்.ஐ.ஆர்.’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், தனது முதல் படத்திலேயே கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதையை கையில் எடுத்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான இப்படம், கிரிக்கெட், குடும்ப உறவுகள் மற்றும் இரு கதாநாயகர்களுக்கு இடையிலான ஈகோவை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. அட்டகத்தி தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராகவும், ஹரிஷ் கல்யாண் விஜய் ரசிகராகவும் நடித்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திரையுலகினரிடையேயும் பாராட்டுகளைப் பெற்ற ‘லப்பர் பந்து’, ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளப் பதிவில் ‘லப்பர் பந்து’ தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். தாங்கள் உருவாக்கும் சில திரைப்படங்கள் வெறும் படைப்புகளாக மட்டுமே இருக்கும் என்றும், சில படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கிடைத்த ரசிகர்களின் அன்பு அளவிட முடியாதது என்றும், படக்குழு கற்பனை செய்ததைவிட மிகப் பெரிய வாழ்க்கையை ரசிகர்கள் இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளதாகவும் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த அன்பை என்றும் தன்னுடன் சுமந்து செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
—
