நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ‘பிரேமலு’ புகழ் கிரீஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் பஹத் பாசில் தயாரித்துள்ளார்.
படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கான காரணம் குறித்து பேசிய பஹத் பாசில், புதுமையான கதையுடன் உருவாகும் நல்ல படைப்புகள் எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி, நிவின் பாலி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவையே சேரும் என்றும் கூறியுள்ளார். நேர்த்தியான திரைக்கதை, வயது வித்தியாசத்தை மையமாகக் கொண்ட காதல், காட்சிப்படுத்தப்பட்ட விதம், நகைச்சுவை என படத்தின் பல அம்சங்களும் சரியான அளவில் அமைந்ததாகவும், ஓணம் விடுமுறையையொட்டி கிடைத்த வெளியீட்டு தேதியும் படத்திற்கு சாதகமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தயாரிப்பாளராக தன்னுடைய பொறுப்பு சிறந்த திரைக்கதையைத் தேர்வு செய்து, அதை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என பஹத் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நல்ல கதைகளையும் திறமையான புதிய கலைஞர்களையும் தேடி வருவதாகவும், அந்த முயற்சி பல நேரங்களில் நல்ல பலனைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள தனது தெலுங்கு படமான ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ படத்திற்கான பணிகளிலும் பஹத் பாசில் கவனம் செலுத்தி வருகிறார்.
