ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகிய ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ மீதும் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது இப்படம் அக்டோபர் 15-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸுக்கு இன்னும் சில காலம் இருக்கும் நிலையில், படத்தின் வியாபாரப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாட்டிலைட், டிஜிட்டல், இசை மற்றும் திரையரங்கு உரிமைகள் என வெவ்வேறு பிரிவுகளில் ‘ஜெயிலர் 2’ படத்துக்கு வர்த்தக ரீதியாக அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, தமிழ்நாடு, ஆந்திரா – தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஹிந்தி மற்றும் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுடன், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் மியூசிக் உரிமைகளையும் சேர்த்து படத்தின் மொத்த வியாபாரம் சுமார் ரூ.600 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான தகவல்கள் தற்போது திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், இதுவரை எந்த தமிழ் நடிகரின் படமும் இத்தகைய அளவிலான வியாபாரத்தை எட்டவில்லை என்றும் சில பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வியாபார எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்துக்கான வர்த்தக எதிர்பார்ப்பு எந்த அளவில் உள்ளது என்பதை இந்த தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
