“என் சிறந்த பங்களிப்பை வழங்குவேன்” – எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தில் நடிப்பது குறித்து ரஷ்மிகா டாக்!

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். சென்னையில் நேற்று (செப். 16) நடைபெற்ற தொடக்க விழாவில் கமல்ஹாசன் கிளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய ரஷ்மிகா மந்தனா, “இந்த நேரத்தில் என் மனதில் நிறைந்திருப்பது நன்றி உணர்வு மட்டுமே. எம்.எஸ். அம்மாவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூரும் இந்த நிகழ்வில் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகள் எம்.எஸ். அம்மா. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த நிகழ்வை பார்த்து ரசிப்பதுடன், சிறிய புன்னகையுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

உங்கள் குரலில் இருக்கும் தனித்துவமான தெய்வீகத் தன்மை ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதை கேட்கும்போதெல்லாம் கடவுளின் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை திரையில் பிரதிபலிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக என்றும் நன்றியுடன் இருப்பேன்.

எம்.எஸ். அம்மாவின் ஆசீர்வாதத்துடன், அவரது கணவர் சதாசிவம் சாரின் ஆசீர்வாதமும், அவரது தாயார் சண்முகவடிவு அம்மாவின் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை. அதேபோல் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவும் வாழ்த்துகளும் எங்கள் படக்குழுவுக்கு வேண்டும். இந்தப் படைப்பிற்காக என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading