தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ படத்திலும் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் பாக்யஸ்ரீ போர்ஸ் தனது பயணத்தை தொடங்கிய பின்னர் தன்னைத் தேடி சினிமா வாய்ப்புகள் வந்தபோது அதை ஏற்றுக்கொண்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு ஒரே மாதிரியான கதைகள் வருவதாகவும், குறிப்பாக பீரியட் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன் என்றும் கேட்பதாக பாக்யஸ்ரீ கூறியுள்ளார். ஆனால், கதைகளை ஜானர் அடிப்படையில் தேர்வு செய்வதில்லை என்றும், தன்னுடைய முடிவில் முதன்மையான இடம் கதைக்கே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கதை பிடித்துவிட்டால் அதை விடாமல் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தன்னால் சிறப்பாக பொருந்த முடியும் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு ஏற்பட்டுவிட்டால், அந்த வேடமாகவே மாறி நடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் பேசும்போது இன்னும் தடுமாற்றம் இருப்பதாகவும் விரைவில் தென்னிந்திய மொழிகளில் சரளமாகப் பேசக் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகையாக இன்னும் பல விஷயங்களைத் தேடிப் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தனக்குள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற வரம்பை தனக்கு விதித்துக்கொள்ளப் போவதில்லை. எனது திறமையை வெளிப்படுத்தி, தன்னை பரவலாக அறியச் செய்யக்கூடிய எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கு சவாலாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தால் வில்லி வேடத்திலும் நடிக்க தயங்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
