ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் அடுத்தகட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்ரன் மற்றும் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய படங்களின் சாயல் கலந்த படைப்பாக ‘தர்மன்’ இருக்கும் என அஷ்வத் மாரிமுத்து ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இதுவரை வெளியான ரஜினியின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தள காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. அடுத்த கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதனுடன் ரஜினிகாந்த் மற்றும் ராஷி கன்னா இணைந்து நடிக்கும் காட்சியை படமாக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இப்படம் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
