தமிழ் சினிமாவை கலாய்ப்பதையே பிரதானமாகக் கொண்ட ‘தமிழ் படம்’ தொடருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். 2010-ல் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான முதல் பாகம், தமிழ் படங்களில் இடம்பெற்ற வழக்கமான காட்சிகள் மற்றும் பாணிகளை நகைச்சுவையாக கிண்டல் செய்தது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து 2018-ல் ‘தமிழ் படம் 2’ வெளியானது.
இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, மூன்றாம் பாகத்தில் எந்த படங்கள், ஹீரோக்கள் மற்றும் பிரபல காட்சிகள் கலாய்க்கப்படப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. ‘தமிழ் படம் 3’ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்றும் அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், படத்தின் தற்போதைய நிலை குறித்து நடிகர் சிவா தகவல் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் ‘தமிழ் படம் 3’ குறித்து கேட்கப்பட்டபோது, படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அனைத்தும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதால், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
