மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (செப். 16) நடைபெற்றது. இதில் நடிகை ரஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். விழாவில் கமல்ஹாசன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தென்னிந்திய சினிமா இன்று தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். முன்புபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழிமாற்றம் செய்து படங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லாத அளவுக்கு தென்னிந்திய திரைப்படத் துறை வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக இருந்த காலம் மாறி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களும் அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார். “நாமெல்லாம் ஒரே குடும்பம்” என குறிப்பிட்ட அவர், தன்னால் மீண்டும் ‘அவ்வை சண்முகி’ கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்றாலும், தாடியை எடுத்தாலும் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.அந்த கதாபாத்திரத்தை ரஷ்மிகாதான் ஏற்று நடிக்க வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், கிடைத்த வாய்ப்பில் முழு உழைப்பையும் அர்ப்பணிக்க வேண்டும் என கூறினார்.
