ஒரு தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனி கவனத்தை பெறும். அந்த வகையில், ‘ஹாட் ஸ்பாட் 2’ படத்திற்குப் பிறகு எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அவரது மகன் ஆதித்யா பாஸ்கர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ‘பீல் மை லவ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏ.என். பாலாஜி தயாரிக்கிறார். பல பான்-இந்தியா திரைப்படங்களை வெளியிட்டுள்ள இவர், இப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் அய்யப்பா, மதுசூதனன் ராவ், நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படப்புகழ் எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ராஜ ரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இசையமைத்துள்ளனர். ஹரி பிரகாஷ் எம் கதை எழுதி இயக்கியுள்ளார்.
வாழ்க்கையில் எந்த வயதிலும், எந்த சூழலிலும் எதிர்பாராத ஒரு அதிசயம் நிகழலாம் என்பதையே படத்தின் மையக்கருத்தாக எடுத்துள்ளனர். இதைச் சுற்றி காதல் மற்றும் நகைச்சுவையுடன் இயல்பான மனித உறவுகள், ஆழமான உணர்வுகள், சுவாரஸ்யமான தருணங்கள் என கதை பயணிப்பதோடு, எதிர்பாராத திருப்பங்களும் இடம்பெறும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘ஹாட் ஸ்பாட் 2’ படத்தில் ஒன்றாக நடித்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் – ஆதித்யா பாஸ்கர் கூட்டணி, தற்போது ‘பீல் மை லவ்’ மூலம் மீண்டும் திரையில் இணைந்துள்ளது.
