நீங்கள் அழகாக இருப்பதால் இப்படத்திற்கு பொருத்தமாக இல்லை என்றார்கள்… நடிகை ஷாஷா சிவகுமார் டாக்!

சிறிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஷாஷா சிவகுமாருக்கு ‘என்ன விலை’ திரைப்படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. ‘ரத்னம்’, ‘லவ் ஓ லவ்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த இவர், இப்படத்தில் கருணாஸின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.

“ஒரு கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்படும் போது, தோற்றத்தை காரணமாக வைத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. ‘நீங்கள் மிகவும் அழகாகவும், உயரமாகவும், சிவப்பாகவும் இருக்கிறீர்கள். இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தமாட்டீர்கள்’ என்று சில ஆடிஷன்களில் கூறி என்னை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதுவரை நான் பல படங்களில் சிறிய கேரக்டர்களில்தான் நடித்துள்ளேன். ஆனால் ‘என்ன விலை’ படத்தில் அந்த அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறி, மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்தின் தோற்றத்திற்காக டல் மேக்கப் பயன்படுத்தி, வெயிலில் நின்று நிறத்தையும் குறைத்து நடித்தேன்” என்று ஷாஷா தெரிவித்துள்ளார்.

கிராமப்புறப் பெண்ணாக நடிப்பது தனது சினிமா பயணத்தில் இதுவே முதல் முறை எனக் கூறும் ஷாஷா, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அந்த கதாபாத்திரத்திற்கான தயாரிப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது எளிதாக இருந்ததாகவும், இதுவரை பெற்ற அனுபவங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் நடித்தவர்களைப் பற்றியும் பேசிய அவர், கருணாஸ் அற்புதமான நடிகர் என்றும், நிமிஷா சஜயன் திறமையானவர் என்றும் தெரிவித்துள்ளார். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது தன்னிடமும் இயல்பாகவே கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ள ஷாஷா, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றிய காலகட்டம் தனக்கு பல புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading