‘விடுதலை’ மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்தார். இவரது பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டுள்ளன.தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி நடித்துள்ளார்.எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், படகுப்போட்டி முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான ‘மண்டாடி’, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சூரியின் நடிப்பை பாராட்டும் விதமாக ரஜினிகாந்த் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார். இதை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரசித்தார். அவர் தொலைபேசியில் அழைத்து மனமார வாழ்த்தியது எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் மிகவும் முக்கியமான தருணம். மறுமுனையில் அவரது குரலைக் கேட்ட அந்த விலைமதிப்பற்ற தருணத்தில் எடுத்த புகைப்படம் இது” என பதிவிட்டுள்ள சூரி, “அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்றும் தெரிவித்துள்ளார்.
