மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. முழுக்க கடலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் உருவாக்கம் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை நடிகர் சரத்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில், ‘மண்டாடி’ பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள சரத்குமார், இந்திய சினிமாவில் இதுவரை முயற்சிக்கப்படாத துணிச்சலான படைப்பாக இப்படம் இருப்பதாக தெரிவித்துள்ளார். எளிய பாய்மரப் படகு பந்தயத்தை மையமாக கொண்டு தொடங்கும் கதை, மனிதநேயம், அன்பு மற்றும் தியாகம் என பல உணர்வுகளை கடந்து செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடலில் படமாக்கப்பட்ட காட்சிகளும், கடுமையான சூழலை எதிர்கொண்டு நடித்த நடிகர்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினரின் துணிச்சலும் படத்தின் முக்கிய பலமாக இருப்பதாக சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். சூரி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.மேலும், ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நம்பிக்கையையும் துணிச்சலையும் சரத்குமார் பாராட்டியுள்ளார்.
