சித்து சித், பிக்பாஸ் தர்ஷிகா மற்றும் ரித்விகா நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கும் இப்படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.சுவிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளன. நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்டோரும் நடித்துள்ள நிலையில், படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
சென்னையில் நடைபெற்ற பட விழாவில் ரித்விகா பேசும்போது, இந்தப் படம் வழக்கமான கிரைம் த்ரில்லர் படங்களைப் போல் இல்லாமல் பல திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இதுவரை தனது படங்களில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான பெண் கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளதாக கூறிய அவர், ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் எதிர்மறையான கதாபாத்திரம் கிடைத்ததால் வித்தியாசமாக முயற்சி செய்ய விரும்பி நடித்ததாக குறிப்பிட்டார்.
தற்போது படங்களை தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. என தனித்தனியாக பார்க்கும் நிலை இருப்பதாக கூறிய ரித்விகா, அனைத்து படங்களையும் முதலில் திரையரங்கில் பார்ப்பது சினிமாவுக்கு நல்லது என தெரிவித்தார். ‘தி டார்க் ஹெவன்’ படத்தையும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே, கதாநாயகனாக அறிமுகமாகும் சித்து சித், தனது புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
