தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த கூட்டணி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ‘ரணபலி’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘ரணபலி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைக்கின்றனர். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு ‘ரணபலி’ திரைப்படத்தின் கதை உருவாகி வருகிறது. தனது மக்களை காப்பாற்றுவதற்காக போராடும் புரட்சிகர வீரனை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், ‘ரணபலி’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை ராஷ்மிகா மந்தனா நிறைவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
—
