‘மண்டாடி’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரைவிமர்சனம்!

ராமநாதபுரத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பாய்மரப் படகு போட்டியை பின்னணியாகக் கொண்டு ‘மந்தாடி’ திரைப்படம் உருவாகியுள்ளது. சத்யராஜிடம் சூரியும் சுகாஸும் பயிற்சி பெறுகின்றனர். சில பிரச்சனைகளால் சொந்த ஊரை விட்டு சென்னை வரும் சூரி, அங்கேயே வேலை பார்த்தபடி தனது கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்.

ஒரு கட்டத்தில் தனது முன்னாள் காதலியின் மகனை காப்பாற்ற வேண்டிய சூழல் சூரிக்கு ஏற்படுகிறது. இதனால் மீண்டும் ராமநாதபுரத்திற்குத் திரும்பும் அவர், எதிர்பாராதவிதமாக தான் முன்பு விலகிய பாய்மரப் படகு போட்டியில் மீண்டும் பங்கேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியும் சுகாஸும் போட்டிக் களத்தில் எதிரெதிராக நிற்கின்றனர். நண்பர்களாக இருந்த இருவரும் போட்டியாளர்களாக மாறியதன் பின்னணி என்ன? இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது யார்? வேண்டாம் என்று ஒதுக்கிய போட்டியை சூரி மீண்டும் கையில் எடுக்க வேண்டிய காரணம் என்ன? என்பதற்கான பதில்களுடன் பரபரப்பாக நகர்கிறது மீதிக்கதை.

சூரி படம் முழுவதும் தனது கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் வகையில் ஒன் மேன் ஆர்மியாக சிறப்பாக நடித்துள்ளார். சாகசக் காட்சிகளில் அவரது உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கடலில் நடைபெறும் பாய்மரப் படகு போட்டிக்கான காட்சிகளும், அதற்காக சூரி மேற்கொள்ளும் பயிற்சிகளும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. தெலுங்கு நடிகரான சுகாஸ், தமிழில் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். சத்யராஜின் அனுபவமான நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. பால சரவணன், ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு கடல் சார்ந்த காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசையும் கதையுடன் இயல்பாக பயணிக்கிறது. நேர்த்தியான திரைக்கதை மற்றும் புதுமையான காட்சியமைப்புகள் படத்தின் பலமாக உள்ளன. அதேவேளையில், பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் சில இடங்களில் சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றன. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத களத்தை எடுத்துக்கொண்டு, பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து கவனம் ஈர்க்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி படத்தின் பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading