பெண்கள் மீது சமூகத்தால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து நடிகை நமிதா சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கும் சமூக அழுத்தங்கள் குறித்து அவர் பேசிய பகுதி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.
பெண் குழந்தையை வளர்த்து, அவளுக்காக செலவு செய்து, பின்னர் திருமணம் செய்து வைத்து வரதட்சணையும் கொடுப்பது, இறுதியில் அந்தப் பெண் கணவர் வீட்டில் ஒரு வேலைக்காரரைப் போல வாழ்வதற்காகவா என நமிதா கேள்வி எழுப்பியுள்ளார். சமூகத்தில் இருக்கும் பல கட்டுப்பாடுகள் பெண்களை மட்டுமே மையப்படுத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாலி அணிவது, குங்குமம் வைப்பது, கணவரின் நலனுக்காக வரலட்சுமி விரதம் இருப்பது என பல விதிமுறைகள் பெண்களுக்கு மட்டுமே இருப்பதை குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நெறிமுறைகளை உருவாக்கியது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவை பகவத்கீதை அல்லது வேதங்களில் உண்மையாகவே கூறப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெண் தெய்வங்களை கோயில்களில் வழிபடும் அதே சமூகத்தில், வீட்டில் இருக்கும் பெண்களை மதிக்காத முரண்பாடும் இருப்பதாக நமிதா தெரிவித்துள்ளார். இதுபோன்ற விஷயங்களை கேள்வி எழுப்பும் பெண்களை உடனடியாக பெண்ணியவாதி என ஒதுக்கிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த நடைமுறைகளுக்கு எதிராக கேள்வி கேட்கும் மனநிலை தற்போது பெண்களிடம் உருவாகி வருவதாகவும், தங்களது உரிமைகளை பெண்கள் வெளிப்படையாக கேட்பதை சில ஆண்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்களால் துன்புறுத்தப்படாத ஒரு பெண்ணைக்கூட இதுவரை தான் சந்தித்ததில்லை என நமிதா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உருவாகியிருப்பதற்கு ஆண்களும் ஒரு காரணம் என்பதால், அந்தச் சூழலை மாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே இருப்பதாக தெரிவித்துள்ளார். “இந்த மாதிரி உடை அணியாதீர்கள்” என்று பெண்களுக்கு அறிவுரை கூறுவதற்கு பதிலாக, உங்கள் வீட்டு ஆண்களை ஒழுக்கமாக வளருங்கள்; பெண்களை மதிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என நமிதா வலியுறுத்தியுள்ளார்.
