இயக்குநராக “டூரிஸ்ட் பேமிலி” படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் பெற்ற அபிஷந்த் ஜீவிந்த், “வித் லவ்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராகவும் தனது இருப்பை பதிவு செய்தார். அடுத்ததாக அவர் நடிக்கும் மூன்றாவது படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் புதிய படத்துக்கு “பிக்காசோ” என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிஷந்த் நடிக்கும் இந்தப் படத்தை கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகி இயக்குகிறார். டிராமா கம்பெனி பேனரில் ஏ.பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரகதீஷ் பிரபு மேற்கொள்கிறார். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷந்த் ஜீவிந்த் ஒரே திரையில் இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பில் இதுவும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
கதாநாயகியாக ஷிவானி நாகரம் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், யோகலட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல பாடகர் கானா வினோத், “பிக்காசோ” படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
