கிராமத்து வாழ்க்கையை அதன் இயல்பான தன்மையுடன் திரையில் பதிவு செய்து, தமிழ் சினிமாவில் தனித்துவமான பாதையை உருவாக்கியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கடந்த ஜூன் 10ம் தேதி பாரதிராஜா மறைந்த செய்தி ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது. இந்நிலையில், அவர் இறுதியாக நடித்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளை சந்திக்க உள்ளது என்ற தகவல் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முருகையா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு “புலவர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பாரதிராஜாவின் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடம் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளத.
பாரதிராஜாவின் இறுதித் திரைப்படம் என்பதே “புலவர்” படத்திற்கான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர் மீண்டும் திரையில் தோன்றுவதை பார்க்கும் வாய்ப்பு என்பதால், ரசிகர்களுக்கு இப்படம் உணர்வுப்பூர்வமான அனுபவமாகவும் அமைய உள்ளது. செப்டம்பர் 25ம் தேதி “புலவர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
