மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த புதிய கூட்டணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் நடிகர்களுக்கு காட்சிகளை விளக்கும் புகைப்படங்களும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் காட்சிகளின் பிரத்யேக புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இந்த புகைப்படங்கள் வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது தலைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இஞ்சி வெல்லம்’ என்ற வித்தியாசமான தலைப்பு ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர். ரகுமான் இசை, விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணி என எதிர்பார்ப்பை உருவாக்கும் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
