இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அந்த வரிசையில், காஷ்மீரில் தற்போது புதிய சர்வதேச திரைப்பட விழா ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலவிய பாதுகாப்பு தொடர்பான சூழல் காரணமாக காஷ்மீரில் சர்வதேச அளவிலான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடைபெறாமல் இருந்தன. சமீப ஆண்டுகளில் பாதுகாப்பு நிலை மேம்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், காஷ்மீர் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று தொடங்கும் விழா செப்டம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திரைப்பட விழாவிற்கான சர்வதேச நடுவர் குழுவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய திரைப்பட ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், ஜெர்மனியைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் டோரதி வென்னர், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஹிமான்சு சேகர் கதுவா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஊடகத் தொழில்முனைவோர், ஆவணப்படத் தயாரிப்பாளர் கெய்கோ பாங் உள்ளிட்டோர் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
—
