அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ திரைப்படம் வெற்றியடைந்த பிறகு, அதன் அடுத்த பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ‘பில்லா 2’ படத்தை அவர் இயக்கவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான காரணத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த காலகட்டத்தில் அஜித் நடிக்கும் ‘பில்லா 2’ படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘பஞ்சா’ படத்தையும் இயக்குவதற்கு விஷ்ணுவர்தன் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார். இரு திரைப்படங்களுக்குமான படப்பிடிப்பு காலக்கட்டம் ஒரே நேரத்தில் வந்ததால், எந்தப் படத்தை தேர்வு செய்வது என்ற இக்கட்டான நிலை அவருக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முதலில் பவன் கல்யாண் படத்திற்கே தான் தனது சம்மதத்தை தெரிவித்திருந்ததாகவும், அதற்கான பணிகளில் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே ஈடுபட்டிருந்ததாகவும் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு ‘பில்லா 2’ படத்திற்குச் சென்றால், ‘பஞ்சா’ படக்குழுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கொடுத்த வாக்கை காப்பாற்றும் முடிவில் தான் உறுதியாக இருந்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
அஜித்துடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பையும் இந்தச் சூழலில் விஷ்ணுவர்தன் நினைவுகூர்ந்துள்ளார். தனது நிலைமையை அஜித்திடம் எடுத்துக் கூறியபோது, அதை அவர் எந்தவித வருத்தமும் இல்லாமல் புரிந்துகொண்டதாகவும், தனது முடிவை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ‘பில்லா’ வெற்றிக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கைநழுவியது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும், ஒரு இயக்குநராக ஏற்கனவே அளித்திருந்த வாக்கை நிறைவேற்றுவதே சரியான முடிவு என அப்போது கருதியதாக விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
