நடிகர் ரவி மோகன் தற்போது நடிப்புடன் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி தயாரித்து வருகிறார். இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இசைப் பொறுப்பை பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஏற்றிருப்பது இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மேற்கத்திய இசை பாணியில் பாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள கெனிஷா, முதல்முறையாக ஒரு முழுநீள திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனால் அவர் அமைக்கும் இசை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இதற்கான முதல் அப்டேட்டாக ‘ஹையர்’ பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி பாடல் வெளியாகும் என்பதை புரோமோ வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். ரவி மோகன் மற்றும் யங் ராஜா இணைந்து எழுதியுள்ள இப்பாடலுக்கு கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கெனிஷா, இந்தப் படத்தில் தான் இணைந்த விதம் குறித்தும் இசையமைக்கும் அனுபவம் குறித்தும் மனம் திறந்துள்ளார். “முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ரவி மோகனின் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்ததால், இப்படத்திற்கு இன்னும் சிறந்த இசையமைப்பாளர் கிடைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராத வகையில் சரியான நேரத்தில் இந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. ஒரு முழுநீள படத்திற்கு இசையமைப்பது மிகப்பெரிய பொறுப்பு. கதையின் தாக்கத்தை இசை மிஞ்சிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். அதற்காக பல்வேறு இசை பாணிகளை ஆராய்ந்து, கதைக்கு ஏற்ற வகையில் இசையை உருவாக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
