“இது இந்திய மோட்டார் பந்தயத்திற்கு மாபெரும் பாய்ச்சல்” – முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!

தமிழக சட்டசபையில் நேற்று (03/09/2026) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். உலகத் தரத்திலான கார் பந்தயங்களை நடத்துவதற்கான சூழலை தமிழகத்தில் உருவாக்குவதன் மூலம், கார் உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள் வளர்ச்சி பெறும் என்றும், இதன் வாயிலாக சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழக இளைஞர்களிடம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் வகையில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன கட்டமைப்புகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாகும் இந்த நகரத்தில் பார்முலா 1 முதல் பார்முலா 4 வரையிலான சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் அஜித்குமார், மோட்டார் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்ததற்காக முதல்வர் விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மோட்டார் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அஜித், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற கருத்தை குறிப்பிட்டு, “தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவில் மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸை வளர்க்க முதல்வர் விஜய் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்றும் அஜித் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading