11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியது இன்றும் வருத்தம் – கரீனா கபூர் OPEN TALK!

2000-ம் ஆண்டு வெளியான ‘ரெஃப்யூஜி’ படத்தின் மூலம் தனது 19-வது வயதில் பாலிவுட்டில் அறிமுகமானவர் கரீனா கபூர். ஜே.பி. தத்தா இயக்கிய அந்தப் படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்த அவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

தற்போது மேக்னா குல்சார் இயக்கும் ‘தாயரா’ என்ற குற்றவியல் திரில்லர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்றும், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பாட்காஸ்டர் ஹனுமான் தாஸுக்கு அளித்த பேட்டியில் தனது கல்வி குறித்து மனம் திறந்த கரீனா, 11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார். அப்போது நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இருந்ததாகவும், ஆனால் படிப்பை பாதியில் நிறுத்திய முடிவு இன்றளவும் தனது வாழ்க்கையில் தீராத வருத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட கரீனா, மகன்கள் தைமூர் மற்றும் ஜெஹ் இருவரும் முதலில் தங்களது கல்வியை முழுமையாக முடித்த பிறகே விருப்பமான துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இதே அனுபவம்தான் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுக்கவும், யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் தன்னை ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக கரீனா கபூர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading